ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி காட்டுப்பகுதியில், அடர்ந்த வனப்பகுதியான தலமலை அமைந்துள்ளது. இந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான யானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது உள்ளன. இவைகள் அவ்வப்போது உணவு தேடியும், நீர் அருந்தவும் வனப்பகுதியை விட்டு சாலை பகுதிக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (18.08.2020) மாலை தலமலை அருகே ஒற்றை யானை ஒன்று அவ்வழியாக வந்த வாகனங்களை கடுமையாக துரத்தியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பலர் தங்களது வாகனத்தை அப்படியே கீழே போட்டு விட்டு உயிர் தப்பினால் போதும் என ஓடினார்கள்.
மேலும் அந்த காரை துரத்தி வந்த யானையை கண்டு அதிர்ந்த கார் ஓட்டுனர் சாமர்த்தியமாக பின்புறமாக காரை நகர்த்தி உயிர் தப்பினார். சாலையில் நின்று கொண்டிருந்த அந்த யானை, பின்னர் வனப்பகுதிக்குள் உள்ளே சென்றது, இதனால் அந்தப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
அடர்ந்த காட்டுப் பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதில் யானையின் நடமாட்டம்தான் அதிகமாக உள்ளது என வனப்பகுதி மக்கள் அச்சத்தோடு கூறுகிறார்கள். இது ஒவ்வொருமுறையும் வழக்கமான ஒன்றுதான் என்றாலும், வனப்பகுதியில் வாழும் மலைவாசிகள் தங்களோடு ஒன்றிணைந்த வனவிலங்குகள் வாழ்வியல் நிலையோடு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.