வடகிழக்கு பருவமழை கடந்த சிலநாட்களாக பெய்து வருகிறது. மழை வந்த பிறகே முன் எச்சரிக்கை என்ற பெயரிலும் மீட்பு நடவடிக்கை அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
பள்ளிகள், அரசு அலுவலகம் என்று அனைத்துமே ஒவ்வொரு மழைக்கும் தெப்பக்குளமாக மாறிவிடுகிறது என்பதை ஒவ்வொரு முறையும் பார்க்கும் அதிகாரிகள் மழைக்காலம் போனதும் அதை மறந்துவிடுகிறார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் அவதிப்படுவதும் நோயால் பாதிக்கப்படுவதும் மாணவர்கள்தான்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. கிழக்கு கடற்கரைப் பகுதியான கட்டுமாவடி, கிருஷ்ணாசிப்பட்டிணம், கோட்டைப்பட்டிணம், உள்ளிட்ட கடலோர கிராமங்கள் ஏரிகள் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்து கிராமங்களை சூழ்ந்தது. அதனால் மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தனர். இதற்கு என்ன காரணம் ஏரிகள் நிரம்பிய பிறகு கூடுதலாக வரும் தண்ணீர் வெளியேறும் வடிகால் வாரிகள் முழுமையாக கட்டிடங்களாலும், தடுப்பு சுவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதே. அவசர உதவி மையங்கள் கூட வடிகால் வாரிகளில்தான் கட்டப்பட்டுள்ளது. மழை முடிந்த பிறகு அவற்றை சீரமைக்க அதிகாரிகள் தவறிவிடுகின்றனர். அதனால் வடிகால் தண்ணீர் கடலுக்கு நேரடியாக செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சப்படுத்தி வெளியேற்றிவிட்டு கடலுக்கு செல்கிறது.
அதேபோல அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலகம் பல வருடங்களாக முழுமையாக தண்ணீரில் தத்தளிக்கிறது. அந்த தண்ணீர் வெளியேறிச் சென்ற வடிகால் வாரிகள் காணாமல் போனதால் இன்றும் அந்த அவல நிலை தொடர்கிறது. அதேபோல மணமேல்குடி அரசுமேல்நிலைப்பள்ளி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து சாக்கடையாக காட்சி அளிக்கிறது. பள்ளி வளாகங்களில் பலநாட்களாக தண்ணீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் கொசு உற்பத்தியாகி மாணவர்களுக்கு காய்ச்சல் பொன்ற நோய்களையும் உற்பத்தி செய்கிறது.
இனிமேலாவது பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றும் நடவடிக்கை எடுத்தால் மாணவர்களை நோய்களில் இருந்து காப்பாற்றலாம்.