நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி 20 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து கூட்டணி இன்றி நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வரும் நிலையில், 10 பெண்கள் மற்றும் 10 ஆண்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 20 பெண்கள், 20 ஆண்கள் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் இந்த முறையும் 20 பெண் வேட்பாளர்களுக்கு, 20 ஆண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தென்சென்னை, ஆரணி, கன்னியாகுமரி, கோவை, மயிலாடுதுறை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூர், கரூர், விழுப்புரம், வேலூர், நீலகிரி, தென்காசி, திருவள்ளூர், பொள்ளாச்சி, நாகப்பட்டினம், அரக்கோணம், ஈரோடு உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.