சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கோயம்பேட்டிலிருந்து மெட்ரோ ரயில் பாதைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக வீடு, கடைகள் மற்றும் நிலங்களை கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கையகப்படுத்தும் வீடுகள், கடைகள் மற்றும் நிலங்களுக்கு இழப்பீடுகளையும் வழங்க திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்துவதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருமண மண்டபமும் அடிபடுகிறது. விஜயகாந்த் திருமண மண்டபம் இருக்கும் பகுதியில் தான் மெட்ரோ ரயில் அண்டர்கிரவுண்ட் பணிகள் நடக்க உள்ளன.
ஏற்கனவே திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது சாலை விரிவாக்கத்திற்காக விஜயகாந்த் திருமண மண்டபம் இடிக்கும் சூழல் ஏற்பட்டது.
அப்போது தனது திருமண மண்டபத்தை வேண்டுமென்றே இடிகிறார்கள் என்று கூறி புதிய கட்சியை தொடங்கி திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்து எம்எல்ஏ ஆனார் விஜயகாந்த். அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலிலும் திமுகவை தொடர்ந்து தாக்கி அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவரானார்.

இந்த நிலையில் விஜயகாந்தின் திருமண மண்டபம் முற்றிலும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்காக கையகப்படுத்தப்படும் என்ற செய்தி விஜயகாந்த் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தேமுதிகவின் அடையாளமாக கருதப்பட்ட இந்த மண்டபம் இடிக்கப்படவிருக்கிறது என்ற செய்தி விஜயகாந்த் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை தந்ததுடன் கட்சி அலுவலகத்தை வேறு எங்கு நடத்துவது என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.