Skip to main content

குழந்தையின் உடலைச் சாலையோரம் வீசிய குடும்பம்; தலையைக் கவ்விச் சென்ற தெருநாய்கள்!

Published on 12/02/2025 | Edited on 12/02/2025

 

Family throws child's body on the road and stray dogs bite off head in uttar pradesh

அரசு மருத்துவமனை அருகே புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் தலை இல்லாமல் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம், லலித்பூரில் உள்ள அரசு மருத்துவமனை அருகே நேற்று புதிதாகப் பிறந்த குழந்தை உடல் ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட தெருநாய்கள், குழந்தையை கிழித்து அதன் தலையைக் கடித்துச் சென்றுள்ளது. தலை இல்லாத குழந்தையின் உடல் அங்கு கிடந்திருப்பதை கண்ட அந்த வழியாக சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், உத்தரப் பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டம், பகதூர்பூர் பகுதியில் வசிக்கும் சங்கீதா என்ற கர்ப்பிணிப் பெண், கடந்த 9ஆம் தேதி லலித்பூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்டார். அதே நாளில், அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை எடை குறைவாக இருந்ததால், பராமரிப்பு பிரிவுக்கு குழந்தையை மாற்றப்பட்டது. 

இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த குழந்தை இறந்துவிட்டது. அதன் பின்னர் அந்த குழந்தையின் உடலை சங்கீதாவின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்துள்ளனர். ஆனால், சங்கீதாவும் அவரது குடும்பத்தினரும் டிஸ்சார்ஜ் ஆவணத்தைக் கூட பெறாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் தான், புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலை மருத்துவமனை அருகே வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர் என்று போலீசாருக்கு தெரியவந்தது. 

சார்ந்த செய்திகள்