கன்னியாகுமரி மாவட்டம், கண்டன்விளை அருகில் உள்ள மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருடைய சகோதரியின் மகன் ராகுல்(27). இவர் அந்த பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவருக்கு கண்டன்விளை பகுதியில் சுமார் 7 செண்ட் நிலம் உள்ளது. அந்த இடத்தில், தனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வருகிறார்.
இந்த நிலையில், அது விவசாய நிலமாக இருப்பதால் வரைபட அனுமதி பெற முடியாத சூழ்நிலை இருந்துள்ளது. இதன் காரணமாக விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றித் தர வருவாய்த் துறையிடம் ராகுல் விண்ணப்பம் செய்திருந்தார். அதனை தொடர்ந்து, ராகுலின் 7 செண்ட் நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆய்வாளர் ஆய்வு செய்து அதன் கோப்புகளை கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், இந்த விண்ணப்பம் மனு தொடர்பான விபரத்தை கல்குளம் துணை தாசில்தார் ருக்மணி (45) கிடப்பில் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், ராகுல் தனது சித்தி ஜெகதீஸ்வரியிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ஜெகதீஸ்வரி துணை தாசில்தார் ருக்மணியை சந்தித்து விண்ணப்ப மனுவுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அப்போது, விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்ற வேண்டுமென்றால் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று ருக்மணி கூறியுள்ளார். அதற்கு, பணத்திற்கு ஏற்பாடு செய்து வருவதாக கூறி அங்கிருந்து ஜெகதீஸ்வரி புறப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, இது பற்றி ஜெகதீஸ்வரி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், ரசாயணம் தடவிய ரூ.25 ஆயிரம் பணத்தை ஜெகதீஸ்வரியிடம் வழங்கியுள்ளனர். பின்னர், அந்த பணத்தை ருக்மணியிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறிய அறிவுரையின்படி, ஜெகதீஸ்வரி ருக்மணியிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அந்த அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ருக்மணியை கையும் களவுமாக பிடித்தனர். அதன் பிறகு, இந்த விவகாரம் குறித்து ருக்மணி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.