கடலூர் மாவட்டம், திட்டக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று காலை கண்காணிப்பு பொறியாளர் சத்தியநாராயணா தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த வெலிங்டன் நீர்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பேரின்பம் மற்றும் நிர்வாகிகள், மேலூர், எரப்பாவூர், சிறுமுளை, கோடங்குடி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளைக் கண்டித்து செயற்பொறியாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து செயற்பொறியாளர் சுகன்யா, உதவி செயற்பொறியாளர் நாராயணசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமாதானத்தையேற்று போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பொறியாளரிடம், கோடங்குடி, எரப்பாவூர், மேலுார், சிறுமுளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சீரமைக்கப்படாமல் உள்ள மின்கம்பங்கள் குறித்து புகார் அளித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் நடவடிக்கை இல்லை. கோட்ட தலைமையிடத்தில் அதிகாரிகள் தங்குவதில்லை. செயற்பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர்களுக்கு குடிநீர், இருக்கை வசதிகள் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாம்தமிழர் கட்சி சார்பில் மாவட்டசெயலர் வேலாயுதம், புதிய மின்இணைப்புக்கு லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில் அளிக்கும் புகார்களுக்கு ஒப்புகைசீட்டு வழங்க வேண்டும் என மனு கொடுத்தார்.