ஒரு போலீஸ்காரர் எப்படி இருக்க வேண்டும்? வாய்மையே வெல்லும் என்ற தமிழக அரசின் முத்திரை வாசகத்தைக் கடைப்பிடித்து, கடமை தவறாதவராக இருக்க வேண்டும். ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கேற்ப, கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இப்படி நடந்துகொள்கிறார்களா காவல்துறையினர்? நல்லவர்கள் அந்தத் துறையில் இல்லாமல் இல்லை. அதே நேரத்தில், சுதாகர் போன்ற போலீஸ்காரர்களும் இதே துறையில்தான் இருக்கிறார்கள்.
யார் இந்த சுதாகர்?
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் போலீஸ்காரராக பணிபுரிகிறார் சுதாகர். ஊருக்குத் தெரிந்து போலீஸ் வேலை பார்த்தாலும், யாருக்கும் தெரியாமல் இன்னொரு வேலையை கள்ளத்தனமாக பார்த்து வந்திருக்கிறார். ஆம். தேனி மாவட்டம் – கம்பம் அருகிலுள்ள குள்ளப்பகவுண்டனூரைச் சேர்ந்த சாமியின் மனைவி சுகந்தியோடு கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு, எந்நேரமும் செல்போனில் பேசி பொழுதைக் கழித்தபடியே இருந்திருக்கிறார். வாட்ஸப்பில் இருவரும், அவரவர் செல்பி போட்டோக்களை அனுப்பி குதூகலித்து வந்திருக்கின்றனர்.
ஒருநாள் சுகந்தியின் போக்கில் சந்தேகம் ஏற்பட்டு, அவளுக்குத் தெரியாமல், அவளுடைய செல்போனை எடுத்து ஆராய்ந்திருக்கிறார் சாமி. அப்போது, கால் ரெகார்டரில் தன் மனைவி சுகந்தியும், அவளது கள்ளக்காதலன் போலீஸ்காரர் சுதாகரும், அவரது நண்பர் பாண்டியராஜனும், கூலிப்படையைச் சேர்ந்த மணிவண்ணணும் தன்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய பேச்சும் பதிவாகியிருந்திருக்கிறது. கணவனையே கொல்லும் அளவுக்கு வெறித்தனமாக மனைவியின் கள்ளக்காதல் இருந்ததை அறிந்து ஷாக் ஆன சாமி, கூடலூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.
கணவனைக் கொலை செய்துவிட்டால், கடைசி வரையிலும் கள்ளக்காதலைப் பாதுகாத்து அனுபவித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்த சுகந்தியைக் காவல்துறையினர் கைது செய்தனர். போலீஸ்காரர் சுதாகர், அவரது நண்பர் பாண்டியராஜன், கூலிப்படை மணிவண்ணன் ஆகியோரும் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
நல்ல காதலே கொலையில் முடியும் காலம் இது! கள்ளக்காதல் அதைவிட தீவிரமானது அல்லவா? கொலையும் செய்வாள் பத்தினி என்பது சுகந்தி விஷயத்தில் தலைகீழாகிவிட்டது.