கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் திருவதிகை பகுதியில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது பண்ருட்டி - பாலூர்சாலை வழியாக நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. போலீசாரை கண்டதும் அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை ஓரமாக நிறுத்தி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கார் அருகில் சென்று சோதனையிட முயன்றபோது, கார் ஓட்டி வந்த ட்ரைவர் காரை விட்டு இறங்கி ஓடியுள்ளார். திரைப்பட பாணியில் துரத்தி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து காரை சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக நாட்டு வெடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனைக் கண்டு அதிர்ச்சியடந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதில், பிடிபட்ட நபர் புதுச்சேரி மாநிலம் அங்காளக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 24 வயது வாழ்முனி என்பது தெரியவந்தது இதையடுத்து போலீசார் பிடிபட்ட இளைஞர் வாழ்முனி குறித்து புதுச்சேரி போலீசாருக்கு தகவல் அளித்ததோடு புதுச்சேரிக்கு பண்ருட்டியைச் சேர்ந்த போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி வாழ்முனி அரியாங்குப்பம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடி செல்லும்போது தவளைக் குப்பத்தில் உள்ள ஒர்க் ஷாப்பில் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டு இருந்த காரை திருட்டுத்தனமாக ஓட்டிச் சென்றதோடு, அதில் நாட்டு வெடிகளை வைத்து திருமதியில் உள்ள வியாபாரியிடம் விற்பதற்காக கொண்டு சென்றுள்ளார். அப்படி செல்லும்போது கெட்டிச்சாவடி பகுதியில் போலீசாரைக் கண்டதும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்து மூணு பவுன் நகை 50 ஆயிரம் பணத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டு மீண்டும் திருவதிகை நோக்கி காரில் வந்த போது போலீசாரிடம் சிக்கொண்டதாக வாழ்முனி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காரில் கொண்டுவரப்பட்ட நாட்டு வெடிகள் எங்கிருந்து வாங்கப்பட்டது; அதை விற்பனை செய்த வியாபாரி யார்? கொள்ளை அடித்த வீடு யாருடையது? இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.