
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கு மேற்பட்ட படகுகளில் உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் தனுஷ்கோடி- தலைமன்னார் இடையிலான கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 34 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கடந்த 25ஆம் தேதி (25.01.2025) இரவு கைது செய்தனர்.
அதோடு மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, ஒரே இரவில் தமிழக மீனவர்கள் 34 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக அவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று முன்தினம் (26.01.2025) கடிதம் எழுதியிருந்தார்.
அதே சமயம் கைது செய்யப்பட்ட 34 மீனவர்களையும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று (27.01.2025) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 34 மீனவர்களையும், இலங்கை சிறையில் உள்ள 60க்கும் மேற்பட்ட மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டது. மேலும், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஜனவரி 31ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “25.1.2025ஆம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், மீனவர்களது படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வதும், சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது என்றும், திமுக அரசு மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது வேலை முடிந்துவிட்டதாக கருதி அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுவதாக பாதிக்கப்படும் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், படகுகளை பறிமுதல் செய்வதை தடுக்கவும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் 39 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்க வலியுறுத்துகிறேன். மத்திய அரசும் காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.