
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இறுதியாக இந்த தொடர் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இத்தகைய சூழலில் தான் இந்த ஆண்டுக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் (19.02.2025) தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
இந்த தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் என மொத்தமாக 8 அணிகள் விளையாட உள்ளன. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நேற்று முன்தினம் மோதியது. இந்த போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை நியூசிலாந்து அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நேற்று (20.02.2025) இந்தியா களமிறங்கியது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று (21.02.2025) மோதுகின்றன. இந்த போட்டியானது பாகிஸ்தானின் கராச்சி நேஷனல் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறுகிறது. அதே சமயம் நாளை மறுநாள் (23.02.2025) பாகிஸ்தானையும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. அதோடு இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.