
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசுகையில், '' ஒருவர் கட்சியில் சேர்வது, இணைவது என்று சொன்னால் பொதுவாக ஒருவர் எப்படி இருக்க வேண்டும். அந்த தலைமையினுடைய பார்வை நமக்கு விழாதா என்றுதான் இருக்க வேண்டும். நாங்களெல்லாம் எம்ஜிஆரிடம் இருந்த பொழுது என்னைக் கட்சியை விட்டு நீக்கினார். ஒருகட்டத்தில் தேர்தலைச் சந்தித்த பொழுது அரசியல் ரீதியாக கட்சியை விட்டு நீக்கினார். அமெரிக்க மருத்துவமனையில் இருந்துவிட்டு வந்த பொழுது என்னவென்றே தெரியாது. இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் எதையோ சொல்லி என்னை நீக்கி விட்டார். நாங்கள் அடுத்து இந்த கட்சியில் சேர்வதற்கு தவம் கிடந்தோம்.
தலைவர் எங்கு வருகிறாரோ அங்கு போய் நின்றோம். அவரை பார்க்க வேண்டும் என தலைமைக் கழகத்தில் போய் நின்றோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலை வரும் பொழுது அவர் ஒருநாள் எங்கள் அனைவரையும் கூப்பிட்டு உட்கார வைத்து பேசினார். பேசிவிட்டு ஒவ்வொருவராக கூப்பிட்டார். அவர்களுடைய குறைகளைக் கேட்டார். அதேபோல் எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது கேட்டார். என்னை கட்சியில் சேர்த்துக் கொண்டால் போதும் வேறு ஏதும் வேண்டாம் என்றேன். அடுத்தநாளே பத்திரிகையில் என் பெயர் வந்துவிட்டது. ஒரு தலைமை இடத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தொண்டன் தன்னுடைய உணர்வுகளை முழுமையாக காட்டுகின்ற பொழுது அந்த தலைமை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளும். அதை விட்டுவிட்டு தானும் ஒரு தலைவன் என நின்று கொண்டு எல்லா வகையிலும் தவறு செய்து கொண்டு, தேர்தல் வரும் போது எதிர்த்துத் தேர்தலில் நிற்பது; இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நிற்பது; யாராவது மூன்றாவது மனிதரை வைத்து வழக்குப் போடுவது; அந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்வது; உச்சநீதிமன்றத்திற்கு கேவியட் போடுவது. சிந்தித்துப் பாருங்கள். இது ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயமா. இதற்கு மேல் நான் ஓபிஎஸ்க்கு பதில் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.