
உலக தாய்மொழி தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மொழியின் சிறப்பு, அவசியம், பன்மொழி கலாச்சாரம் ஆகியவற்றை போற்றவும் உணர்த்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக தாய்மொழி தினமான இன்று (21.02.2025) தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இது தொடர்பாக சமுக வலைதளங்களில் வாழ்த்துகளை பதிவு பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி. இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம். அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி. உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் தமிழககத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் இயற்றிய உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் மையநோக்க விளக்கப் பாடலையும் அந்த பதிவில் இணைத்துள்ளார். அதில், “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர். உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம். போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி. அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்.
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும் செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!. அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி ஓதி வளரும் உயிரான உலக மொழி - கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும் எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற எந்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும். புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி. நம் மொழி நம் மொழி - அதுவே செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்! வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.