
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆனால், அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்துகொள்ளாமல் இருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு - அவினாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்களால், கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார். ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்காக மாபெரும் தியாக வேள்வியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இதனால், அதிமுகவில் உள்கட்சி மோதல் இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், 2026ஆம் சட்டமன்றத் தேர்தலையொட்டி, பணிகள் மேற்கொள்ள அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. அ.தி.மு.கவில் அமைப்பு ரீதியாக 82 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்த எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பில், மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை. இது தமிழக அரசியலில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.