
சென்னையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று (19.02.2025) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி, ராதா கிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் ஆகிய திட்டப் பகுதிகளில் 712 குடியிருப்புதாரர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பி.கே. சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, இ. பரந்தாமன், அ. வெற்றியழகன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 100க்கு 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். இன்னும் மீதி இருக்கும் திட்டங்கள் என்னென்ன என்று நீங்கள் கேட்கலாம். இதில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அறிவித்த திட்டங்கள் பல. தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதை யாரும் மறந்துவிடக் கூடாது. அது என்ன என்று கேட்டால், உதாரணத்திற்கு ஒன்றினை சொல்கிறேன். புதுமைப் பெண் என்கின்ற திட்டம் தேர்தல் வாக்குறுதிகளில் வழங்கப்படவில்லை.
புதுமைப் பெண் திட்டம் என்று சொன்னால் உங்களுக்குத் தெரியும். பள்ளி படிப்பை முடித்துவிட்டு ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்து இருக்கக்கூடிய மாணவிகள் வசதி இல்லாத காரணத்தினால் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதை உணர்ந்த காரணத்தினால்தான், ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்கு செல்கின்றபோது மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்து இன்றைக்கு அது வழங்கப்பட்டிருக்கிறது.
அதனால்தான், இன்றைக்கு இந்த மாணவிகளெல்லாம் என்னைப் பார்த்து அப்பா, அப்பா என்று அழைக்கக்கூடிய ஒரு உணர்ச்சிகரமான நெகிழ்ச்சியான செய்தியை பார்த்திருப்பீர்கள். அந்த அளவிற்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல. மாணவிகளுக்கு மட்டும்தானா, எங்களைப்போன்ற மாணவர்களுக்கு இல்லையா? என்று மாணவர்கள் கேட்டார்கள். உங்களுக்கும் உண்டு என்று சொல்லி தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது” எனப் பேசினார்.