
சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ''தங்களுடைய திறமையை யாரும் வளர்த்துக் கொள்ளலாம் அதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் இந்தி சொல்லித் தரப்படுகிறது. இந்தி பிரச்சார சபை இருக்கிறது. கேந்திரிய வித்யாலயாவில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இந்தி சொல்லித் தரப்படுகிறது. இதை யாரும் பெரிய அளவில் எதிர்க்கவில்லை. ஆனால் மத்திய அரசு 'ஒரே தேசம்; ஒரே மொழி' என்கின்ற நிலைப்பாட்டை எடுத்து அதை திணிக்கப் பார்க்கிறது.
இந்தியாவில் பல மொழிகளைப் பேசக்கூடிய பல தேசிய இனங்கள் உள்ளோம். இவர்களின் செயல் திட்டம் என்பது பல பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ஒரே மொழியைப் பேசக்கூடிய மக்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். இந்தி இந்த தேசத்தின் ஒற்றை மொழியாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள், முயற்சிக்கிறார்கள். இதை அவர்கள் மறுக்க முடியாது. ஒரே தேசம்; ஒரே கலாச்சாரம் என்பது அவர்களின் நிலைப்பாடு என்பதைப் போல ஒரே தேசம்; ஒரே மொழி என்பதும் அவர்களின் நிலைப்பாடு. எனவே இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்.
இந்தியையும் சமஸ்கிருதத்தையும் உயர்த்திப் பிடிக்கிறார்கள். அதற்காக கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கீடு செய்கிறார்கள். அதைக் கட்டாயமாக்குகிறார்கள். அரசின் கொள்கை நிலைப்பாடாக அதை திணிக்கிறார்கள். ஒரு தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுப்பது என்பது வேறு; அரசே ஒரு கொள்கையாக வரையறுத்து திணிப்பது என்பது வேறு. கொள்கையை திணிப்பதை எதிர்க்கிறோம். மும்மொழி கொள்கை என்பது ஒரே மொழி ஒரே தேசம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்துவதால் அதை நாங்கள் எதிர்க்கிறோம்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள், 'நீங்கள் சிபிஎஸ்சி நடத்துவதாகக் கூறப்படுகிறதே?' என்ற கேள்விக்கு, ''நான் நடத்தவில்லை எங்கள் இடத்தில் ஒருவர் நடத்துகிறார். பெயர் மட்டும் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. எங்க இடம் என்பதால் என்னுடைய பெயரை பயன்படுத்துகிறார்கள்'' என்றார்.