
மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அருப்புக்கோட்டை தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தும் அளவுக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அருப்புக்கோட்டை-ராமசாமிபுரத்தில் இயங்கி வந்த தனியார் நர்சிங் கல்லூரி அங்கீகாரம் பெறவில்லை எனப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அக்கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கு சான்றிதழ்கள் திருப்பித் தரப்படும் என அறிவித்திருந்த நிலையில், கல்விக் கட்டணம் திரும்ப வழங்கப்படாததால், கல்லூரி மாணவிகளும் பெற்றோரும் அக்கல்லூரி முன்பாக, மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். காவல்துறையினர் அவர்களைக் கைது செய்ய முயற்சித்ததால் களேபரமானது.

200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வந்த அந்தக் கல்லூரி உரிய அங்கீகாரம் பெறாத நிலையில் சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்பட்டன. கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கல்லூரியின் தாளாளர் கைது செய்யப்பட்டார். கல்விக் கட்டணம் 20ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தாங்கள் செலுத்திய பணத்தை இன்று (20-2-2025) திரும்பத் தராததால், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்ததால், அவர்களைக் கொத்தாக அள்ளி கைது செய்ய முயற்சித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரையும் கைது செய்வோம் என்று காவல்துறையினர் எச்சரித்ததால், போராட்டதைக் கைவிட்ட மாணவிகள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று முறையிடுவோம் எனக் கூறிய படியே கலைந்து சென்றனர்.