புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(34). இவரது மகளுக்கு கடந்த 2016-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கான வரவு-செலவுகளை இதில் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் தனக்கு தரவேண்டுமென மகேஷ்வரன் கூறியுள்ளார். இதில் ஒரு லட்சத்தை சில மாதங்களில் முத்துச்சாமி திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால், வட்டியுடன் சேர்த்து மேலும் 1 லட்சத்து 20 ஆயிரம் தரவேண்டுமெனக் கூறியுள்ளார்.
இந்தத் தொகையை கொடுக்க முடியாமல் முத்துச்சாமி திணறி வந்த நிலையில் அரவது நிலத்தை எழுதித்தருமாறு மிரட்டியுள்ளார். இந்நிலையில், நடைபெற்ற ஊர்ப் பஞ்சாத்தில் மேற்படி தொகைக்கு நூற்றுக்கு 3 ரூபாய் வீதம் வட்டியோடு கொடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதற்கு முத்துச்சாமியும் சம்மதித்துள்ளார். ஆனால், நூற்றுக்கு 12 ரூபாய் வீதம் வட்டி போட்டுத் தரவேண்டும். இல்லையென்றால் நிலத்தை எழுதித்தர வேண்டுமென மகேஷ்வரன் மிரட்டியுள்ளார். மேலும், வீட்டிற்குச் சென்று பெண்களை கேவலமாகப் பேசுவது, சமையல் செய்யவிடாமல் தடுத்து பாத்திரங்களை வெளியில் எறிந்து வீசுவது போன்ற அராஜகச் செயலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து வடகாடு காவல் நிலையத்தில் முத்துச்சாமி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், மனமுடைந்த முத்துச்சாமி வியாழக்கிழமையன்று பூச்சிமருந்தைக்குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துச்சாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்பொழுது தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்: கொடூரமான கந்துவட்டி முறையால் விவசாயி முத்துச்சாமியை தற்கொலைக்குத் தூண்டிய தங்க.மகேஷ்வரன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள முத்துச்சாமிக்கான சிகிச்சைச் செலவு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகையும் மகேஷ்வரனிடம் வசூல் செய்து ஒப்படைக்க வேண்டும். காவல் துறை உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.