தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார்தாரராக வந்த பெண் வக்கீலுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய விவாகரத்தில், நீதிமன்றத் தலையீட்டின் பேரில் எஸ்.ஐ.மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு உயரதிகாரிகள் தடைப்போட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருபவர் திணேஷ்குமார். இவர் மீது அதே காவல்நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட 2 வது அமர்வு நீதிமன்ற வழிக்காட்டுதலின் படி 15/04/219 அன்று IPC 354 (A), 356 (D) மற்றும் எஸ்.சி,எஸ்.டி சட்டப்பிரிவின் படி 3(1)(i), 3(1)(v), 3(2)(vii) ஆகிய பிரிவுகளில் சட்டவிரோதமாக தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல், வன்கொடுமை சட்டம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
எஸ்.ஐ.மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆரோ, "துப்பாக்குடி பகுதியிலுள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கும், அருகிலுள்ள மற்றொருவர் வீட்டிற்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக புகார் கொடுத்துள்ளார் தென்காசியில் கடந்த ஆறு வருடமாக வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் மேலக்கடைய நல்லூரை சேர்ந்த பொன்மாரி. இது சம்பந்தமாக கடந்த 08/09/2018 மற்றும் 15/09/2018 அன்று பெண் வழக்கறிஞர் பொன்மாரியின் மொபைலிற்கு போன் செய்த எஸ்.ஐ., " உங்க வார்த்தைக்காகத் தான் எப்.ஐ.ஆர்.போடுறேன்." என இரட்டை அர்த்தத்தில் பேச, அவரோ, ' சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். எனக்காக வேண்டாம்." என போனை வைத்துள்ளார். அதன் பிறகு எஸ்.ஐ.தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்திருக்கின்றார். அதன் பிறகு 21/02/2019 சம்பந்தப்பட்ட ஸ்டேஷனில் எஸ்.ஐ.மீது புகாரளித்தும் அது கவணிக்கப்பெறாததால் நெல்லை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இந்த எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது." என்கிறது.
" நாங்கள் கொடுத்தப் புகாருக்கு எப்.ஐ.ஆர்.பதியாமல் எஸ்.ஐ.தினேஷ்குமாரைக் காப்பாற்றும் பொருட்டே எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதிலிருந்து சம்பந்தப்பட்ட காவல்துறை எப்.ஐ.ஆர்.காப்பியை புகார்தாரருக்கு கொடுக்கவேயில்லை. அதனையும் நீதிமன்றம் சென்று தான் பெற்றுக்கொண்டோம். இன்று வரை வழக்கு கிடப்பில் உள்ளது. வெறொரு ஆளாக இருந்தால் கைது வரை சென்றிருப்பார்கள். இங்கு போலீஸ் எஸ்.ஐ என்பதால் அவரைக் காப்பாற்ற அமைதி காக்கின்றார்கள் அவருக்கு மேலிருக்கும் உயரதிகாரிகள். எங்களைப் பொறுத்தவரை மாவட்ட எஸ்.பி. நேரடியாக தலையிட்டு நேர்மையாக வழக்குப்பதிவு செய்து அம்பை டி.எஸ்.பி.ஜாஹீர் உசேன் அல்லாத வேறொரு நபரைக் கொண்டு இதனை விசாரிக்க வேண்டும். அப்பொழுது தான் நியாயம் கிடைக்கும். வழக்கறிஞருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்கள் கதி என்னவாகும்..?" என்கிறார் வழக்கறிஞரின் உறவினர் ஒருவர்.
காவல்துறையின் கண்ணியம் காக்க நடவடிக்கை எடுக்குமா மாவட்ட காவல்துறை..?