காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் கிராமத்தில் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மற்றும் காவிரி ஆறு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
இன்றைய நிலவரப்படி காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,70,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மாவட்டத்தின் தாழ்வான பகுதியான தவிட்டுப்பாளையம் பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதி வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்றி வருகின்றனர். இங்கிருந்து வெளியேற்றப்பட்ட 36 குடும்பத்தை சார்ந்த 104 பேர் அப்பகுதியில் உள்ள கிராம சேவை மைய கட்டிடம், அரசு நடுநிலைப்பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் இவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.