!['DMK has no attempt to think about the next generation' - Premalatha Vijayakanth's speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/_BkgyXiBJtclucm8sI5cXb811L8avYZ02LmVzHvBxM4/1719487270/sites/default/files/inline-images/a72374.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக நேற்றும் (26.06.2024) அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்குப் பின்பு பேச அனுமதி தருகிறேன் எனச் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்குச் சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகச் சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகினறனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''காலையில் எழுந்தவுடன் குடிப்பவர்களைக் குடிகாரன் என்று சொல்லக்கூடாது என ஒரு புதிய விளக்கத்தை அமைச்சர் ஒருவர் சொல்கிறார். காலையில் எழுந்தவுடன் குடிப்பவர்களைக் குடிகாரன் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வார்கள். அமைச்சர் முத்துசாமி அவர்களே உங்களுக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தால், தன்மானம் இருந்தால் இந்த 63 பேர் மரணத்திற்கும் நீங்கள் முழுமையாக பொறுப்பேற்று உங்களுடைய மந்திரி பதிவையே ராஜினாமா செய்ய வேண்டும். அதுதான் மக்களுக்கு செய்யும் நியாயமான செயலாக இருக்கும். இதை சிபிஐ வழக்காக மாற்ற வேண்டும். 40க்கு 40 நாங்கள் ஜெயித்து விட்டோம் அதனால் தான் பொறாமையில் செய்கிறார்கள் என்று ஸ்டாலின் சொல்கிறார். 40க்கு 40 ஜெயிச்சு என்ன செய்யப் போறீங்க கேண்டினுக்குத்தான் போகப் போறீங்க. கேண்டினில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரபோறீங்க. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து 200க்கு 200, விக்கிரவாண்டி தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட எல்லோரையும் டெபாசிட் இழக்க வைப்பது. இதுதான் இவர்கள் யோசனை. திமுகவிற்கு அடுத்த தலைமுறைகளைப் பற்றி யோசிக்கும் முயற்சியே கிடையாது. அடுத்த தேர்தலை நோக்கித்தான் இவர்கள் ஆட்சி செய்கிறார்களே ஒழிய, இவர்கள் அடுத்த தலைமுறைக்கு எதையும் விட்டுவிட்டு போவதாக இல்லை'' என்றார்.
படம்:எஸ்.பி.சுந்தர்