
பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக அவர், அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி, அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு கடத்திய போது . விமானத்தில் அழைத்து வரப்பட்டவர்கள் பயணம் முழுவதும் கால்களில் சங்கிலி மாட்டியும், கைகளில் விலங்குகள் இட்டும் பயணித்தது தொடர்பாக எதுவும் பேசவில்லை எனக் கண்டனம் எழுந்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை விமர்சித்து விகடன் சார்பில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதற்காக விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்ந்தது.
இது தொடர்பாக விகடன் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. முன்னதாக விகடன் இணைய இதழான, ‘விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10, திங்கள்) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்துப் பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது.
இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, தமிழ்நாடு பாஜக மாநில தலைவரால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. நூற்றாண்டு காலமாக விகடன் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்துச் சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம். ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில் தான் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் , விகடன் இணையதளத்தை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், “சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.