கரோனோ நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீடிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 475 ஆக உள்ள நிலையில் 438 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 38 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய 35 வயது பெண் லேப் டெக்னிஷியனுக்கு கடந்த வாரம் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் வசித்து வந்த தண்டபாணி நகர் தனிமைப்படுத்தப்பட்டது. அந்தப் பெண்ணின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவரது கணவர், 2 பிள்ளைகள், மாமியார் ஆகியோர்க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் அக்குடும்பத்தைச் சேர்ந்த 87 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது சொந்த ஊரான ஆதிவராகநல்லூரில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பலனின்றி இறந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 12-ஆம் தேதி லால்பேட்டையைச் சேர்ந்த 49 வயது பெண் ஒருவர் கரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது இரண்டாவது மரணம் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் நேற்று முன்தினம் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 468 ஆக இருந்த நிலையில் கடந்த வாரம் சென்னையிலிருந்து கடலூர் வந்த புதுக்குப்பத்தைச் சேர்ந்த 28 வயது பெண் டாக்டர், அவரது 34 வயது கணவர் மற்றும் நல்லூர் அருகேயுள்ள சிறுநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர், சிதம்பரம் முடசல் ஓடையைச் சேர்ந்த ஒருவர், ஆயிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் என நேற்று 7 பேருக்கு கரோனா உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 475 ஆக உள்ளது.