புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை அருகில் உள்ளது பரம்பூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 1978ஆம் ஆண்டு முதல் 40 பெண் விவசாயிகள் உள்பட 281 விவசாயிகள் நீர்ப்பாசன சங்கம் அமைத்து மழைநீரை பரம்பூர் பெரிய கண்மாயில் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் சுமார் 268 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது.
மேலும் விளைவிக்கும் நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் கமிசன் ஏதுவுமின்றி சங்கத்தின் மூலமே முன்பதிவு செய்து விற்பனை செய்து விவசாயிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். நீர்ப்பாசன சங்கம், நீர் நிறைந்துள்ள கண்மாய் போன்றவற்றைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து தவறுகள் நடக்காதவாறு பாதுகாத்து வருகின்றனர். இந்த சங்கத்திற்குத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை ஐந்தரை ஆண்டுக்கு ஒரு முறை விவசாயிகளே தேர்வு செய்து வருகின்றனர்.
தற்போது பொன்னையா என்ற விவசாயி தலைவராக உள்ள நிலையில் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி பரம்பூர் பெரிய கண்மாய் நீரினைப்பயன்படுத்துவோர் சங்கம் மத்திய அரசு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த தேசிய விருதைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பரம்பூர் பெரிய கண்மாய் நீரினைப்பயன்படுத்துவோர் சங்கத்திற்கு வழங்கினார். இந்நிலையில் வரும் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள பரம்பூர் நீர்பாசன சங்கத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் பொன்னையா கலந்து கொள்கிறார்.