Skip to main content

“காவல்துறை அரசியல் ஏஜென்சி அல்ல” - உயர்நீதிமன்றம் காட்டம்!

Published on 08/01/2025 | Edited on 08/01/2025
High Court says Police is not a political agency 

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்  தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில், “அருந்ததியருக்கான 3% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணக் கோரியும், இது தொடர்பாக 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துக் கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி சென்னை மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை பேரணி நடத்த அனுமதி கோரி எங்கள் கட்சியின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு விண்ணப்பித்திருந்தோம்.

இதற்காகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணப்பம் அளித்த நிலையில், குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் பேரணிக்கு அனுமதி இல்லை எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து பேரணி நடத்தும் வகையில் வழித்தடத்தை மாற்றிக் கொள்ளும் படி காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். அதன் அடிப்படையில் நவம்பர் 7ஆம் தேதி ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து நேரடியாகச் சென்று தமிழக ஆளுநரைச் சந்தித்து மனு அளிப்பது என்று அறிவிக்கப்பட்டது.  இந்த பேரணிக்கு முந்தைய நாளான நவம்பர் 6ஆம் தேதி பேரணிக்கு அனுமதி மறுத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கு முன்னதாகவே பேரணியில் கலந்துகொள்ளத் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்திருந்தனர். எனவே இந்த உத்தரவைப் பிறப்பித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் அமர்வில் இன்று (08.01.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மூன்று வாரங்களுக்கு முன்பே பேரணிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தும், ஆளுநரின் நேரத்தைப் பெற்றும் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது சட்ட விரோதமானது ஆகும்.

கடைசி நேரத்தில் இந்த பேரணிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டால் என்ன அர்த்தம்?. காவல்துறை அரசியல் ஏஜென்சி அல்ல. அரசு ஏஜென்சி. பேரணிக்கு அனுமதி அளிப்பதோ, மறுப்பதோ வேறு விஷயம். அதை உரியக் காலத்திற்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதனையடுத்து, “இந்த மனுவுக்குப் பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த மனுவுக்குப் பதில் அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்