Skip to main content

3 காவலர்கள் பணியிட மாற்றம்; “நடைபெறுவது அ.தி.மு.க ஆட்சியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ஆட்சியா?” -வி.சி.க தலைவர் திருமாவளவன்!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

Cuddalore 3 police cops periyar statue

 

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கராஜ், ரஞ்சித் மற்றும் அசோக் ஆகிய மூன்று காவலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதன் பின்னனியில் அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகிய மூன்று காவலர்களும் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். அதற்காக அவர்கள் மூவரையும் பழிவாங்கும் நோக்கோடு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குப் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் மூவரையும் மீண்டும் கடலூரிலேயே பணியாற்ற ஆணையிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

 

பெரியார் சிலைக்கும், அண்ணா சிலைக்கும் காவி உடை அணிவித்தும், காவி சாயத்தை ஊற்றியும் அவமரியாதை செய்பவர்களைக் கைது செய்ய- தண்டிக்க முன்வராத தமிழக அரசு, இன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூவரையும் தண்டித்திருப்பது வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது அ.தி.மு.க ஆட்சியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ஆட்சியா என்கிற சந்தேகத்தை இது எழுப்புகிறது.

 

குறிப்பிட்ட காவலர்கள் மூவரும் தங்கள் பணி நேரத்திலோ சீருடையிலோ இதைச் செய்யவில்லை. அவர்கள் செய்தது எந்த விதத்திலும் சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்ல. தமிழ்நாட்டின் தன்மானத்தைக் காத்தவரும், சமூக நீதிக்காகத் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது குற்றம் என்று தமிழக அரசு கருதுகிறதா? இதைத் தமிழக முதல்வர் தெளிவுபடுத்தவேண்டும்.

 

Ad

 

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்களுள் மூவரும் எந்தவொரு புகாருக்கும் ஆளாகாதவர்கள். அப்படியானவர்களை இடமாற்றம் செய்து தண்டிப்பது ஏற்புடையதல்ல. பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் மூவரையும் மீண்டும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்றிட ஆணையிட வேண்டுமெனவும் தங்களின் ஆட்சி பெரியார் வழிவந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரில் இயங்கும் ஆட்சிதான் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வி.சி.க சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்