மத்திய அரசால் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்று அனைத்து எதிர்க் கட்சிகளும் குரல் எழுப்பி போராடி வருகின்றன. அதேபோல் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்த அகாலிதளம் கட்சி கூட்டணியில் இருந்து விலகியது.
பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஒரு லட்சம் வாகனங்களில் டெல்லியை முற்றுகையிட்டு, கடந்த ஒருமாத காலமாக போராடிவருகின்றனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், போராட்டமும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் என சில கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரத்தில் டிசம்பர் 3ஆம் தேதி மாலை, ஆம்பூர் ரயில் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் வி.சி.க.வினர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதி பெறாமல் போராடியதாகக் கூறி இரு கட்சியினரையும் காவல்துறையினர் கைது செய்து, ஒரு மண்டபத்தில் அடைத்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின், மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.