கிராம மக்கள் கரோனா பயத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் பயந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் சத்தமில்லாமல் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து மிரட்டி வருகிறது முதலைகள்.
அரியலூர், கடலூர் மாவட்டங்களின் வழியே ஓடுகிறது கொள்ளிடம் ஆறு. இந்த கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் முதலைகள் அவ்வப்போது புகுந்து ஆடுகளைப் பிடித்து தின்பதும், மனிதர்களைக் கடிப்பதுமாக உள்ளது. அவ்வப்போது ஊருக்குள் படையெடுக்கும் முதலைகளைக் கண்டு மக்கள் தூக்கமின்றித் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
நேற்று காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சின்ன பொன்னேரி கிராமத்தில் அங்குள்ள ஏரியில் இருந்து ஒரு முதலை இறை தேடி கரையேறி வந்துள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் கண்டு ஏரிக்கரையோரம் உள்ள முட்புதரில் மறைந்திருந்தது. இதைத் தற்செயலாகக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாகக் கிராம நிர்வாக அலுவலர் மூலம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூலம் முதலையைப் பிடித்து சிதம்பரம் அருகில் உள்ள முதலை பண்ணையில் கொண்டுபோய் விட்டுள்ளனர்.
மழைக்காலங்களிலும் அதன் பிறகும் கொள்ளிடத்திலிருந்து லோயர் அணைக்கட்டு வழியாகச் சிதம்பரம் வீராணம் ஏரி பாசன கால்வாய்கள் உட்பட பெரும்பாலான வாய்க்கால்கள் வழியாகத் தண்ணீர் நிரம்பச் செல்லும். இதனால் அந்தக் கால்வாய்களில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். கொள்ளிடம் அதன் துணை ஆறுகள் அதன் கால்வாய்கள் செல்லும் தண்ணீர் இறுதியில் சிதம்பரம் அருகே சென்று கடலில் கலக்கிறது. மழைக்காலங்களில் வந்து சேர்ந்த இந்த முதலைகள் பல ஆண்டுகளாகவே கொள்ளிடம் கரையோர பகுதிகளிலும் வீராணம் ஏரி கால்வாய் பகுதிகளிலும் சுகமாக வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது கால்வாயில் இறங்கி நடந்து செல்பவர்களையும் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு மாடுகளையும் பலமுறை கடித்து குதறி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன
சின்ன பொங்கனேரி கிராமத்தின் ஏரியில் இருந்து ஊருக்குள் புகுந்த ஒரு முதலை மட்டும் வனத்துறை அதிகாரிகள் பிடித்து சிதம்பரம் அருகே உள்ள முதலை பண்ணையில் விட்டுள்ளனர். அந்த ஏரியில் மேலும் மூன்று முதலைகள் இருப்பதாகவும், அவைகள் அனைத்தையும் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகு தான் மக்களுக்கு நிம்மதி பாதுகாப்பு இருக்கும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
சுமார் 10 ஆண்டுகளாகவே கொள்ளிடம் பகுதி காட்டுமன்னார்கோயில் சிதம்பரம் வரை உள்ள வீராணம் ஏரி உபரி நீர் ஆகியவற்றின் வழியே வெளியே செல்லும் கால்வாய்களில் முதலைகள் குடித்தனம் நடத்துகின்றன. பொது மக்களும் அந்த முதலைகளிடம் இருந்து தப்பிப் பிழைத்து வாழ்ந்து வருகிறோம் என்கிறார்கள்.
காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கண்ணுக்குத் தெரியாத கரோனா உலக மக்களையே மிரட்டி வருகிறது. கண்ணுக்குத் தெரிந்த இந்த முதலை இந்தப் பகுதியில் உள்ள ஊர்களுக்குள் புகுந்து மக்களை மிரட்டி வருகிறது. இது தொடர் சம்பவம் என்கிறார்கள் முதலையிடமிருந்து அவ்வப்போது தப்பித்து வரும் பொதுமக்கள்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தழுதாழைமேடு மதுரா வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள கோதண்டகுழி ஏரியிலிருந்து வந்தாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் எதிர் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கருவமரம் புதரில் சுமார் 2 மீட்டர் நீளம் உள்ள முதலையை உயிருடன் இருக்கும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர் எம்.ஆனந்து வனத்துறை அதிகாரிக்குப் புகார் அளித்ததுடன் முதலையின் நடமாட்டத்தினை கண்காணித்து வந்தார். தகவல் கிடைத்த உடன் வருவாய்த் துறை ஆய்வாளர் தேவேந்திரன், வனத்துறை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் மீட்புப் பணி குழுவினர்களுடன் கிராமத்திற்குள் நுழைந்த முதலையைப் பாதுகாப்பாக உயிருடன் மீட்டு டாடா ஏசி வேன் மூலம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் உயிருடன் விட்டனர்.