திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வருட காலமாக கிராம ஊராட்சிகள் சிலவற்றில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் இதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய் அவர்கள் 16.06.2019 அன்று பாளையங்கோட்டை, போடிகாமன்வாடி, முன்னிலைக்கோட்டை, சித்தரேவு, பிள்ளையார்நத்தம், பித்தளைப்பட்டி, அக்கரைப்பட்டி, ஆத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் உதவி திட்ட அலுவலர், உதவி செயற்பொறியாளர், உதவி இயக்குநர் (தணிக்கை) உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு-1), உதவி செயற்பொறியாளர் (ச.ப) ஆகியோரைக் கொண்டு ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
அதன் பின்பும் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. 12.11.2019 அன்று ஆலமரத்துப்பட்டியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்புவிழாவிற்கு வந்த திமுக மாநில பொதுச்செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ. பெரியசாமியிடம் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகள், சிலர் தங்களுக்கு 85 நாட்கள் வரை ஊதியம் வழங்காமல் இருப்பதாகவும், ஊராட்சி செயலர் தண்டபாணியிடம் கேட்டால், என்னிடம் கேட்கக்கூடாது. ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்று பி.டி.ஓ.விடம் கேளுங்கள் என சொல்வதாகவும், ஒன்றிய அலுவலகத்தில் முறையாக பணம் ஏற்றினால்தான் உங்களுக்கு கிடைக்கும் என கூறுவதாக பொதுமக்கள் புகார் செய்தனர்.
அவர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி இதுகுறித்து முறையாக அதிகாரிகளிடம் பேசிய பின்பு உங்களுக்கு கிடைக்க வேண்டிய 85 நாட்கள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை பார்த்ததற்கான சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். தொடர்ந்து ஆத்தூர் ஒன்றியத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்று வந்தாலும், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காததால் முறைகேடுகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. மாவட்ட ஆட்சியர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகள் ஆத்தூர் ஒன்றியத்தில் முறையாக நடைபெற தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.