
மிகச் சிறிய மாவட்டமான தென்காசி மாவட்டத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமெடுத்த நிலையிலிருக்கிறது. இதுவரையிலும் பாதுகாப்பாக இருந்த கிராமப்புறங்களையும் தற்போது அது பதம் பார்த்து வருகிறது. நேற்றைய தினம் ஒரே நாளில் 68 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு மொத்த பாதிப்பின் அளவு 1,412 க்கு பறந்து கொண்டிருக்கிறது. அன்றாடம் மாவட்டத்தில் தொற்றுப்பரவல் அதிகமிருப்பதால் மாவட்ட மக்கள் அச்சத்திலிருக்கின்றனர்.
இதனிடையே மாவட்டத்தின் திருவேங்கடம் நகரம் அருகிலுள்ள ஆவுடையாள்புரம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் கண்டிருக்கிறது. எனவே சிகிச்சையின் பொருட்டு அருகிலுள்ள குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போயிருக்கிறார். அவரை அருகிலுள்ளள ஆலங்குளம் சாலையிலிருக்கும். அரசு கரோனா சோதனை மையத்தில் ரத்த சோதைனைக்காக அங்குள்ள டாக்டர் அனுப்பியிருக்கிறார்.
அவரது சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்ததில் மறுநாள் கரோனா பாஸிட்டிவ் என ரிப்போர்ட் வந்திருக்கிறது. இதனால் அவரை சிகிச்சைக்காக கொண்டு செல்வதற்காக வந்த சுகாதாரத் துறையினர் போதிய வாகன வசதியில்லாததால் மறுநாள் கொண்டுசெல்வதாக சொல்லியுள்ளதால் அவர் பரிதவிப்புடனிருந்திருக்கிறார். ஒரு நாள் தாமதத்திற்கு பின்பு நேற்று இரவு சுமார் 6 மணிக்கு வந்த சுகாதாரத்துறையினர் அவரை வாசுதேவநல்லூர் பக்கம் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றவர்கள் இரவு 7.40 மணியளவில் அங்கு அட்மிட் செய்துள்ளனர்.
அங்கு சென்ற பின், தான் இந்த மையத்திற்கு வந்ததாக தனது ஊரில் உள்ள பலரிடம் தன் செல்லில் பேசியிருக்கிறார். அந்த மையத்தில் மட்டும் சுமார் 60 பேர்கள் வரை சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை அங்குள்ள வாயில் கிரில் கேட்டில் துண்டால் கழுத்தை இறுக்கி கட்டியவாறு பிணமாகத் தொங்கியது தெரிய வந்திருக்கிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குடி டி.எஸ்.பி. சக்திவேல், வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஆகியோர் உடலைக் கைப்பற்றி பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் கேட்டின் வளையத்தில் துண்டை மாட்டித் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்கிறார் புளியங்குடி டி.எஸ்.பி.யான சக்திவேல். இது குறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அந்தோணி, மேல்விசாரணை நடத்தி வருகிறார். கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டது, தென்மாவட்டத்தில் பீதியுடனான பரபரப்பான முதல் சம்பவம்.