Skip to main content

வேலூர் மாவட்டம் பிரிப்பதாக அறிவிப்பு; அரக்கோணம் யாருக்கு?

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

 


தமிழகத்தின் நிலப்பரப்பில் வேலூர் மாவட்டம் மிகப்பெரியது. இந்த மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சுதந்திர தினத்தன்று ஆகஸ்ட் 15ந்தேதி, உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வேலூர் மாவட்டத்தை பிரிப்பதாக அறிவித்துள்ளார்.

 

a


வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாகிறது. மாவட்டம் பிரிப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் வரும் 27 மற்றும் 28ந்தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.


மாவட்டம் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்பு, மக்களிடம் கருத்து கேட்பது என்பது வித்தியாசமாக உள்ளது. இதற்கு காரணம் என்னவென விசாரித்தபோது, மாவட்ட எல்லை பிரிப்பதில் பல குழப்பங்கள் உருவாகியுள்ளது தெரியவருகிறது.


வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் நகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் பிரிக்க வேண்டும் என்பது தான் நீண்ட காலகோரிக்கை. அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது சமீபகால கோரிக்கை.


சென்னை பெருநகரம் வளர்ச்சியடைந்து வருகிறது. அதனால் அரக்கோணம் பெருநகர வளர்ச்சி பகுதியாக அறிவித்து அதனை சென்னை பெருநகர பகுதியோடு இணைப்பதாக ஓராண்டுக்கு முன்பு அறிவித்தது அரசாங்கம். இந்நிலையில் கடந்த மாதம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு நகரை தலைமையிடமாக கொண்டு புதியதாக ஒரு மாவட்டம் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்காக அரசாணையில், அரக்கோணம் வட்டத்தில் இருந்து வடக்கு பகுதி வருவாய் கிராமங்களை செங்கல்பட்டு மாவட்டத்தோடும், தெற்கு வருவாய் கிராமங்களை காஞ்சிபுரம் மாவட்டத்தோடு இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் திடீரென வேலூர் மாவட்டத்தில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக ராணிப்பேட்டை என்கிற மாவட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தின் தலைநகரம் ராணிப்பேட்டையாக இருக்கவே வாய்ப்பு. ராணிப்பேட்டை தலைநகராக இருக்கும் பட்சத்தில் ராணிப்பேட்டைக்கும் அரக்கோணம் நகருக்கும் நீண்ட தொலைவு. இதனால் அரக்கோணம் பகுதி ஆர்வலர்கள் இப்போதே கேள்வி எழுப்பி வருகின்றனர்.


சென்னை பெருநகர வளர்ச்சி பகுதியாக அறிவிக்கப்பட்ட அரக்கோணம் தாலுக்கா, காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டங்களோடு பிரித்து இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபின் புதியதாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


அரக்கோணத்தை, ராணிப்பேட்டை மாவட்டத்தோடு இணைக்க வேண்டும் என்றால் பழைய அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் அந்த இரண்டு மாவட்டங்களின் எல்லை குறையும்.   அப்படி செய்யாமல் ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்கினால் இதன் எல்லை சுருங்கும். இதனால் அதிகாரிகள் என்ன செய்வது என்கிற கேள்வி எழுந்துள்ளது. எப்படி புதிய மாவட்டங்கள் உருவாக்கப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.    இதனால் அரக்கோணம், காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டங்களுக்கா அல்லது ராணிப்பேட்டை மாவட்டத்துக்கா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்