Skip to main content

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 communist Senior leader sankaraiah admitted to hospital

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சங்கரய்யா உடல்நலம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இடதுசாரி இயக்கத்தின் மூத்தத் தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா,  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு சீரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நலம் தேறி அவர் மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில் தோழர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயல வேண்டாம் என்று கட்சியின் மாநிலக் குழு சார்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று தோழர் என். சங்கரய்யா அவர்களைப் பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாகப் பேசினர். தோழர் சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ஆர். வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து கவனித்து வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்