சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பெண்களுக்கு விருதுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பேரன்பிற்குரிய சிங்கப் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள் எனப் பேசத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் சங்ககாலம் முதலே பெண்கள் உயர்வாகப் போற்றப்பட்டு வருகின்றனர். மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது. இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்பால் பெண்கள் முடக்கப்பட்டார்கள். ஆனால், இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் மேயர்களாகவும் உள்ளனர்.
நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதால் அவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியது அவசியம். ஈ.வெ.ராவுக்கு பெரியார் என்ற பட்டம் கொடுத்தது பெண்கள்தான். பெண்களுக்கு துணிச்சல், தன்னம்பிக்கையைக் கொடுத்தது திராவிட இயக்கம்தான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தல்களில் முதன்முறையாக பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு தந்தது திராவிட அரசுதான். மகளிர்நலன் மற்றும் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். பெண்களை அதிகாரமிக்கவர்களாக உருவாக்க வேண்டும். சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தைத்தான் அணுகினார். அந்த அளவிற்கு பெண்களின் பாதுகாப்பில் தமிழகம் நாட்டிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறது” என்றார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் கடந்த 3ம் தேதி தமிழகத்தின் பெண் ஆளுமைகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்கு முன் தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக மகளிர் கல்வி பயின்றுள்ளனர். அதன்பின் படிப்படியாக அவர்கள் பின் தள்ளப்பட்டுள்ளனர். பின்பு வீட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டனர்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.