அதிமுக கட்சி மற்றும் ஆட்சியை வழிநடத்த ஒற்றை தலைமை தான் சிறந்தது என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியதைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு அதன் தொடர்ச்சியாக எழுந்த விவாதங்கள், என அக்கட்சிக்குள் கலவரகுரல் மேலோங்க இதை தடுக்கும் விதமாக மா.செ.க்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், கூட்டம் நேற்று காலை 10.30 க்கு அக்கட்சியின் அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கட்சி தலைமையால் அங்கீகரிக்கப்படாதவர்களிடம் ஊடங்கங்கள் கருத்தை கேட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம் என எச்சரிக்கை அறிக்கை விடுத்திருந்தது.
அதேபோல் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலாலை முதல்வர் எடப்பாடி சந்தித்திருந்தார். இப்படி இரண்டு நாட்களாக பரபரப்பு காட்டி அதிமுக அரசியல் வட்டம் செயல்பட்டு வந்தநிலையில் நாளை டெல்லியில் 15 ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்ல இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதன்பின் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை எடப்பாடி சந்திப்பார் என கூறப்படுகிறது.
அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அதிகாரிகளும் நாளை டெல்லி செல்ல உள்ளனர்.