புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மாநில பிஜேபி தலைவர் வி.சாமிநாதன், பிஜேபி பொருளாளர் கே.ஜி.சங்கர் மற்றும் பிஜேபி ஆதரவாளரான தொழிலதிபர் எஸ்.செல்வகணபதி ஆகியோரை நியமன எம்எல்ஏ-க்களாக நியமித்து கடந்த 2017 ஜூன் மாதம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். ஆனால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்ததையடுத்து அந்த 3 பேருக்கும் ஆளுநரே பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிலையில் இந்த மூன்று பேரின் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லக்ஷ்மி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் பேரவைக்குள் அனுமதிக்க மறுக்கும் பேரவை செயலாளர் உத்தரவை எதிர்த்து நியமன எம்எல்ஏ-க்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மூவரின் நியமனம் செல்லும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று நியமன உறுப்பினர் சாமிநாதன் பேரவைக்குள் சென்றபோது அனுமதிக்காததால் இதுதொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டுள்ளதால் உச்ச நீதிமன்றம் அணுக தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.