சந்திராயான் 2 இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், செப்டம்பர் 2 அடுத்த கட்டத்தை அடையுமெனவும் தமிழக அரசின் அறிவியல் தொழில்நுட்ப குழு தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேசனல் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி பேர் என்ற அறிவியல் கண்காட்சி துவங்கியது. நேற்று முதல் வருகின்ற 31 ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 160 பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்து 200 மாணவர்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். 8 ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இக்கண்காட்சியை தமிழக அரசின் அறிவியல் தொழில்நுட்ப குழு தலைவர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, இந்த கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் சிறப்பான கண்டுபிடிப்புகள் தொழில் முனைவோர்களுக்கு காட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இக்கண்காட்சி மாணவர்களின் படைப்புகளை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கான வாய்ப்பு எனவும், அரசும் இதுபோன்ற கண்காட்சிகளை நடத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.
மேலும் இக்கண்காட்சி மாணவர்களுக்கு ஊக்கமும், உத்வேகமும் அளிப்பதோடு, மாணவர்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். திறமையுள்ள மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருந்தாலும் பொறியியல் மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், தமிழக மாணவர்களின் கண்டுபிடிப்புகள் வெளிநாடுகள் மூலமாக விண்வெளிக்கு செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சந்திராயான் 2 இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், செப்டம்பர் 2 அடுத்த கட்டத்தை அடையுமெனவும் அவர் தெரிவித்தார். மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.