காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் விவசாய அமைப்புகள், விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும், தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட குறுவை சாகுபடி சம்பா பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் சுமார் 15 லட்சம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் விளைச்சல் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் தஞ்சையில் பூதலூர் பகுதியில் பெ.மணியரசன் தலைமையில் காவிரி மீட்புக் குழு விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் பூதலூர் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையினர் தொடர்ந்து நிறுத்தியும் தடுப்பையும் மீறி தண்டவாளப் பகுதிக்குள் நுழைந்த விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியிலிருந்து சென்னை செல்லக்கூடிய சோழன் விரைவு ரயில் நிறுத்தப்பட்டு, மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.