தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவண செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி அறிவித்திருந்தார். இதனையடுத்து சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அதற்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த சூழலில் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கும் கோப்பில் ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட மறுத்ததாக சிபிஐஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டி இருந்தார். அதே சமயம் ஆளுநருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் (ட்விட்டர்) சமுக வலைத்தளத்தில், “சாவர்க்கரை கெளரவிப்பவர்களால் சங்கரய்யாவை எப்படி கொண்டாட முடியும்?. ஊளையிடும் நரிக்கூட்டம் சங்கநாதத்திற்கு சான்றளிக்க முடியுமா?. நாங்கள் யாரென பிரிட்டீஷாரின் சிறைச்சாலைகள் சொல்லும். நீங்கள் யாரென பிரிட்டீஷார் அணிந்த ஷுக்கள் சொல்லும். வீரமும் துரோகமும். எப்பொழுதும் எதிரெதிரானதே!” என குறிப்பிட்டுள்ளார்.