சேலத்தில், தாயை ஆபாசமாகத் திட்டியதால் ஆத்திரம் அடைந்த அத்தை மகன், சிறுவனை செங்கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அம்மாபேட்டை திருவிக பாதை முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு பிரியங்கா என்ற மகளும், ஆறுமுகம் (15) என்ற மகனும் உள்ளனர்.
சிறுவன் ஆறுமுகத்திற்கு, லேசான மூளை வளர்ச்சி குறைபாடு இருந்து வந்தது. அதனால் ஐந்தாம் வகுப்புக்கு மேல் சிறுவனை பள்ளியை விட்டு நிறுத்திய பெற்றோர், வீட்டிலேயே பராமரித்து வந்தனர்.
பிப்ரவரி 3ம் தேதி மாலையில், அம்மாபேட்டை காவல் நிலையம் அருகே உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் ஆறுமுகம் கழுத்து, கை ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். பள்ளிக்கு விளையாட வந்த சிறுவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆறுமுகத்தின் பெற்றோருக்கு தகவல் கூறினர்.
பதறி அடித்து ஓடி வந்த பெற்றோரும், உறவினர்களும் சிறுவனை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சிறுவன் ஆறுமுகத்தின் தந்தையின் தங்கைக்கு 19 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவர், கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஆறுமுகம், அந்தக் கல்லூரி மாணவரையும், அவருடைய தாயாரைப் பற்றியும் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதும், அடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.
கடந்த பிப்ரவரி 3ம் தேதியன்றும், சிறுவன் ஆறுமுகம் அதுபோல் ஆபாசமாக திட்டியுள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தக் கல்லூரி மாணவர், கீழே கிடந்த செங்கல்லை எடுத்து சிறுவனின் காதில் அடித்துள்ளார். காதில் இருந்து ரத்தம் வெளியேறி, சிறுவன் மயங்கி விழுந்துள்ளார்.
அந்த வாலிபர், பிளேடால் சிறுவனின் கழுத்தையும், கையிலும் அறுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். தலைமறைவாக இருந்த அந்த வாலிபரை பிடித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் கூறினர்.