![Bay of Bengal turns into a storm](http://image.nakkheeran.in/cdn/farfuture/ppBbYIY9KqIC13_dmaXjpdiEn4Q8Sht_ArIprCb9slU/1670406993/sites/default/files/inline-images/995_104.jpg)
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானியல் ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ‘மாண்டஸ்’ எனப் பெயரிடப்படவுள்ள இந்தப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நெருங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலையில் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து 770 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கு திசையிலும், காரைக்காலில் இருந்து 690 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கு திசையிலும் தற்போது நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இன்று மாலை புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகர்வதால் தமிழக கடலோரப் பகுதிகளில் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காரணமாக சென்னையில் 9 மற்றும் 10ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.