ராஜபாளையம் – கம்மாபட்டியைச் சேர்ந்த இளைஞரான மாரிமுத்து, ஆண்டுதோறும் தனது ஊரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் – திருவண்ணாமலைக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு அன்னதானம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டவர். கடந்த 18-ஆம் தேதி அன்னதானம் வழங்கிவிட்டு, தன் நண்பர் விக்னேஷுடன் வேனுக்குச் செல்ல பஸ்-ஸ்டாப் அருகே நடந்தபோது, அறிமுகமில்லாத ஒருவர் ஆட்டோ ஓட்டிக்கொண்டு மோதுவதுபோல் வர, “பார்த்துப்போக வேண்டியதுதானே?’ எனக் கேட்டிருக்கிறார் மாரிமுத்து.
உடனே அந்த ஆட்டோ ஓட்டுநர் “நீ இந்தப் பனியன் போட்டிருக்க.. எந்த ஊர்க்காரன்டா?” என்று ஒருமையில் கேட்டபடி முகத்தில் குத்தியிருக்கிறார். மேலும், முருகன் என்பவரும் ஒரு கம்பை எடுத்துவந்து தாக்கியிருக்கிறார். மேலும் நான்கு ஆட்டோ ஓட்டுநர்கள் மாரிமுத்துவை அடித்துள்ளனர். விலக்கிவிட வந்த ஜெயலட்சுமியையும் அந்தக் கும்பல் தள்ளிவிட்டு, ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு “இது.. கோட்டை. ஒழுங்கா இங்க இருந்து போயிருங்க. இல்லைன்னா கொல்லாம விடமாட்டோம்” என்று கொதித்துள்ளனர். இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்துறையினர், எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் முருகன் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
தீண்டாமை எப்போது ஒழியுமோ?