நாமக்கல் அருகே, ஏரியில் சடலமாகக் கிடந்த அழகுநிலைய பெண், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. அவரை தீர்த்துக்கட்டியதாக லாரி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள மொளசி அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில் என்கிற வையாபுரி. பூக்கடை ஒன்றில் மேலாளராக உள்ளார். இவருடைய மனைவி வனிதா (29). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
செந்திலின் சகோதரி, திருச்செங்கோட்டில் அழகு நிலையம் வைத்துள்ளார். இதில் வனிதா உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை (அக். 19) வழக்கம்போல் காலையில் வனிதா வேலைக்குச் சென்றார். மறுநாளான ஞாயிற்றுக்கிழமை தனது மூத்த மகனுக்கு பிறந்தநாள் என்பதால் அவனுக்கு புது துணிமணிகள் எடுத்து வருவதற்காக மாலையில் வேலை முடிந்து கடைவீதிக்குச் சென்றுள்ளார், வனிதா.
இந்நிலையில், அக். 19ம் தேதி இரவு 8 மணியளவில், தனது கணவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய வனிதா, மகனுக்காக புத்தாடைகள், சாக்லெட்டுகள் வாங்கியிருப்பதாகவும், கேக் மட்டும் நீங்கள் வாங்கி வந்துவிடுங்கள் என்றும் சொல்லி இருக்கிறார். இரவு நீண்ட நேரம் ஆனதால், பேருந்தை தவற விட்டுவிட்டதாகவும், தனக்குத் தெரிந்த ஒருவரின் காரில் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சொன்னபடி வனிதா, அன்று இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வையாபுரி தன் மனைவியை காணவில்லை என்று மொளசி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில், மைல்கல்பாளையம் ஏரியில் வனிதா சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.
பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சாந்தமூர்த்தி மற்றும் மொளசி காவல்துறையினர், வனிதாவின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறாய்வில் வனிதா, கழுத்து நெரித்து கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வனிதா மாயமான புகார், கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, விசாரணையை முடுக்கினர்.
இந்நிலையில், வனிதாவின் செல்போனில் இருந்து சென்ற அழைப்புகள், அவருக்கு வந்த அழைப்புகள், பதிவுகளின் அடிப்படையில் விசாரணை செய்தனர். இதில் கூட்டப்பள்ளி பிருந்தாவன் நகரைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சுரேஷ் (35) என்பவருடன் வனிதா அடிக்கடி இரவு நேரத்தில் பேசியிருப்பது தெரிய வந்தது.
சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து வந்து காவல்துறையினர் விசாரித்தனர். இதில், அவர்தான் வனிதாவை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. மேலும், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
கொல்லப்பட்ட வனிதா வேலை செய்து வந்த அழகு நிலையம் இயங்கி வந்த அதே வணிக கட்டடத்தில் சுரேஷ் ரிக் லாரி அலுவலகம் வைத்துள்ளார். இதனால் வனிதாவுக்கும் சுரேஷூக்கும் நெருங்கி பழகி வந்தனர். இந்த நெருக்கம் அவர்களிடையே தவறான உடல் ரீதியான தொடர்பு வரை சென்றது.
இந்த நெருக்கத்தின்பேரில் வனிதா, சுரேஷிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் 20 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி சுரேஷை தொடர்பு கொண்ட வனிதா, தனது மகனின் பிறந்தநாள் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது எனக்கூறி 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அன்று இரவு வனிதா, சுரேஷூடன் அவருடைய மோட்டார் சைக்கிளில் விட்டம்பாளையம் வந்துள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். ஏற்கனவே வாங்கிய கடனில் இன்னும் 30 ஆயிரம் ரூபாய் பாக்கி இருக்கிறது. அப்படி இருக்கும்போது எப்படி மறுபடியும் உன்னை நம்பி 20 ஆயிரம் ரூபாய் கடன் தர முடியும். அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்று தடாலடியாக கூறிவிட்டு, அவரை கட்டி அணைக்க முயன்றார்.
இதனால் ஏமாற்றம் அடைந்த வனிதா, சுரேஷீன் 'ஆசைக்கு' இணங்க மறுத்தார். அதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த வனிதா, தனது காலில் இருந்த செருப்பை கழற்றி சுரேஷை அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், வனிதாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பிறகு வனிதாவின் சடலத்தை இழுத்துச்சென்று அருகில் உள்ள ஏரியில் வீசிவிட்டு சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் சுரேஷை கைது செய்தனர். அவரை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவர் சவும்யா மேத்யூ, அவரை 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மாண்புமிகு அமைச்சர் சரியாகச் சொல்லியிருக்கிறார்.