திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் இருக்கும் குட்டத்துப்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, குஞ்சனம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, மைலாப்பூர் ஆகிய கிராமங்களில் பூ விவசாயிகள் அதிகம். தங்கள் விளை பொருட்களை அருகில் உள்ள திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்ல பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு கடந்த திமுக ஆட்சியின் போது வருவாய் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி குட்டத்துப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்திக்கொடுத்தார். மேலும் மினி வேன் வசதியும் செய்து கொடுத்தார்.
அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு மினி வேன்களை இயக்க முடியாமல் செய்துவிட்டனர். கடந்த பத்து வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஐ.பெரியசாமி தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அதிமுக அரசு பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை. அதன்பின்னர் தற்போது மீண்டும் ஆட்சி வந்தவுடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஏற்பாட்டின்படி தற்போது புதியபேருந்துகள் மீண்டும் குட்டத்துப்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, குஞ்சனம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, மைலாப்பூர் உட்பட கிராமங்கள் தோறும் புதியவழித்தடத்தில் இயங்க ஆரம்பித்து விட்டன.
புதிய பேருந்து இயக்க விழாவிற்கு ஊர்ப் பெரியதனக்காரர்கள் தலைமை தாங்கினார்கள். பொதுக்குழு உறுப்பினர் டென்னி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுதாசெல்வி ஆரோக்கியமேரி, குட்டத்துப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரோஸ்லின் சந்தானம், அமைப்புசாரா ஓட்டுநர் அணியைச் சேர்ந்த ராஜா, அவைத் தலைவர் மைலாப்பூர் சூசை, தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த மரியசர்ச்சில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் பெரிய தனக்காரர்கள் பஸ்டெப்போவைச் சேர்ந்த செயலாளர் லியோரிச்சர்டு, பேருந்து ஓட்டுனர் ஆரோக்கியம், நடத்துநர் காளியப்பன் ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின்னர் பேருந்து வசதி தொடங்கியது.
இதுகுறித்து குட்டத்துப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் டென்னி கூறும்போது, “தென்பாண்டி சிங்கம் எங்களின் வழிகாட்டி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எடுத்த நடவடிக்கையின் பயனாக புதிய பேருந்துகள் இயங்கத் தொடங்கி உள்ளன. எங்கள் ஊராட்சி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்!