புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அருகில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருந்த போது திடீரென மேற்கூரை உடைந்து கொட்டியதில் தடுப்பூசி போட வந்த 10 மாதக் குழந்தை மற்றும் அவரது தாயார் ரமலா பேகம், 3 வயது அங்கன்வாடி குழந்தை ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே மூவரையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்ற குழந்தைகள் பெற்றோர்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு வருவாய்த்துறை மற்றும் அதிகாரிகள் அங்கன்வாடி மையத்திற்குள் ஆய்வு செய்து உள்ளே யாரும் போக வேண்டாம் என்று தடுப்புகளை அமைத்துள்ளனர்.
இது குறித்து பெற்றோர்களும், அப்பகுதியினரும் கூறும் போது, “சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கட்டிடத்தில் பழுது ஏற்பட்டுள்ளது என்பதை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளவில்லை. கடந்த ஓராண்டிற்கு முன்பு பழுது பார்க்கும் பணி நடந்தது. அதில் கட்டிடம் முழுவதும் வெடிப்புகளுக்கு சிமெண்ட் பூசி வெள்ளை அடித்து மறைத்துவிட்டனர். ஆனால், இன்று உடைந்து கொட்டி 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு முழுமையாக அதிகாரிகளே தான் காரணம் என்றனர். மேலும் விபத்து நடந்த பிறகு, இனிமேல் புதுக் கட்டிடம் கட்ட முன்வருவார்கள். இதே போல ஏராளமான கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதையும் மாற்ற வேண்டும்” என்றனர்.