தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும், மிசோரம் மாநிலத்தில் மாநிலக் கட்சியான சோரம் மக்கள் இயக்கம் எனும் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மற்ற மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்றாக காங்கிரஸ் கட்சி தேர்தல் நடந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணியின்படி மாநில கட்சிகளுடன் சுமுக உறவை கையாளாமல் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் கடுமையான போக்கு கடைபிடித்ததே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ‘ராகுல் பா.ஜ.க.வை எதிர்த்து போராடப் போகிறாரா அல்லது இடதுசாரிகளை எதிர்த்து போராடப் போகிறாரா’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளா மாநிலம், திருச்சூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; 2024 தேர்தல் களத்தில் கேரள மாநிலத்தில் ராகுல் காந்தி பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடப் போகிறாரா அல்லது இடதுசாரிகளை எதிர்த்து போராடப் போகிறாரா என்பதை காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும். கேரளத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி வேண்டாம் என்று காங்கிரஸ் நினைத்தால் ராகுலை எதிர்த்து வயநாடு தொகுதியில் எங்கள் கூட்டணியும் வேட்பாளரை நிறுத்தும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.