நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக கட்சி இடம்பெற்றது. அப்போது தேமுதிக கட்சிக்கு பாமகவிற்கு இணையாக இடம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். ஆனால் தேமுதிகவுக்கு 4 இடம் தான் கொடுக்கப்பட்டது. போட்டியிட்ட நான்கு இடத்திலும் தேமுதிக டெபாசிட்டை இழந்தது. இதில் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு இணையாக சீட் கொடுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்த தேமுதிகவிற்கு மத்திய இணை அமைச்சருக்கு இணையாக உள்ள வாரிய தலைவர் பதவி தர வேண்டும் என்று பாஜகவிடம் தேமுதிக கூறியதாக சொல்லப்படுகிறது. அப்போது தேர்தல் முடிந்த உடன் வாரிய தலைவர் பதவி தருகிறோம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாக சொல்கின்றனர். இந்த நிலையில் தற்போது பல்வேறு வாரியத் தலைவர்கள் பதவி காலம் முடிவடைய நிலையில் இருப்பதால் தேமுதிகவிற்கு வாரிய தலைவர் பதவி கொடுக்கும் முடிவில் பாஜக இருப்பதாக சொல்லப்படுகிறது.