சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமைக்கும் தமிழக பாஜகவின் மாநிலத் தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலையும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா அல்லது இல்லையா என்பதை நாங்களே தீர்மானிப்போம் என அதிமுகவும் மோதின. பாஜகவின் டெல்லி தலைமைதான் கூட்டணி பற்றிப் பேசுவதற்கும் கட்டளையிடுவதற்கும் அதிகாரம் கொண்டது. மாநில பாஜக தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை என்ற பேச்சுக்கள் அதிமுக தரப்பில் எழுந்தன.
இதன் காரணமாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்தநிலையில், 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் ஜூலை 28 ஆம் தேதி ஊழலுக்கு எதிரான நடைப் பயணத்தைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துவங்க இருக்கிறார்.
ஏற்கனவே திமுகவிற்கு எதிராக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுகவினர் சொத்து பட்டியலையும் பாரபட்சமின்றி வெளியிடுவேன் எனத் தெரிவித்திருந்ததால் மோதல் உருவானது. அதனைத் தொடர்ந்து ஊழல் இல்லாத தமிழகம் வேண்டும் என்றால் இந்த கட்சிகள் இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்து இருந்தார். தொடர்ந்து ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வர் ஜெ. வை விமர்சித்ததாக அதிமுகவினர் எதிர்வினையாற்ற, 'கட்டுசோற்றில் கட்டிய பெருச்சாளி' என்னும் அளவிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரால் அண்ணாமலை வசைபாடப்பட்டார்.
இந்தநிலையில், 'என் மண்; என் மக்கள்' என்ற ஊழலுக்கு எதிரான பேரணியின் தொடக்க விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். ராமேஸ்வரத்தில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.