விருதுநகரில் இன்று மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டல திமுக மாநாடு நடைபெறுகிறது.
தமிழகத்தின் அவல நிலைக்கு மட்டுமல்ல, மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சிக்கும், தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான பேரணி மற்றும் மாநாடு என்றும் விருதுநகரில் ஒலிக்கப்போகும் ஜனநாயகப் போர் முரசம் எனவும் இம்மாநாடு குறித்து பெருமிதம் கொள்கிறது திமுக.
விருதுநகர் திமுக தெற்கு மா.செ. கே.கே.எஸ்.எஸ்.ஆரும், கிழக்கு மா.செ. தங்கம் தென்னரசுவும் “2004-ல் இதே விருதுநகரில் தென் மண்டல திமுக மாநாடு நடந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. தற்போதும் திமுக கூட்டணி பலமாக இருக்கிறது. அதனால், 2004-ல் பெற்ற அதே வெற்றி மீண்டும் கிட்டும். அதற்கு கட்டியம் கூறும் விதமாக இந்த மாநாடு அமையும். இடைத்தேர்தல் நடைபெறும் 21 சட்ட மன்ற தொகுதிகளையும் வெல்வதன் மூலம் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார். அதற்கும் அடித்தளமாக இந்த மாநாடு விளங்கும்.” என்கின்றனர்.
இம்மாநாட்டுக்காக, விருதுநகர் அருகே பட்டம்புதூர் என்ற இடத்தில், 85 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை தயார் செய்திருக்கின்றனர். பொதுக்கூட்டத்துக்காக 20 ஏக்கர் இடமும், வாகனங்களை நிறுத்துவதற்காக 65 ஏக்கர் இடத்தையும் ஒதுக்கியிருக்கின்றனர். மாநாடு நடைபெறும் ஏரியாவில், 7 கி.மீ. தூரத்துக்கு 7 ஆயிரம் கொடிகளையும், பார்க்கிங் பகுதியில் 5000 மின் விளக்குகளையும் அமைத்திருக்கின்றனர். திடல் முகப்பு 500 அடி நீளம், மேடை 60 அடி நீளம், 30 அடி அகலம் என பிரம்மாண்டம் காட்டியிருக்கின்றனர்.
இன்று மாலை 4 மணிக்கு இறையன்பன் குத்தூஸின் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்குகிறது. தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார் மு.க.ஸ்டாலின். திமுக பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி., பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாநாட்டில் உரை நிகழ்த்துகின்றனர்.
9 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டல மாநாடு என்பதால், விருதுநகரில் திமுக தொண்டர்கள் பெருமளவில் திரளுவார்கள்; கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள்; முக்கிய அறிவிப்புக்கள் வெளியாகும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடக்கின்றன.