எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் தரப்பினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினர்.
இக்கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “டிடிவி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தினால் ஆட்சி கவிழும் சூழல் வந்தது. அதனால் நிபந்தனைகள் இன்றி அவர்களுடன் சேர்ந்தேன். ஒற்றுமை வேண்டும் என நாம் சொல்லுகிறோம். வேண்டாம் என ஈபிஎஸ் சொல்லுகிறார். உலகத்திலேயே ஒற்றுமை வேண்டாம் எனச் சொல்லும் ஒருவர் உண்டென்றால் அது ஈபிஎஸ் தான்” என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, அதிமுகவின் கட்சிக் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியவற்றைப் பயன்படுத்தி பன்னீர்செல்வம் கொடுக்கும் அறிவிப்புகளுக்கு எதிராக விளக்கம் கேட்டு ஈபிஎஸ் தரப்பு ஓ.பி.எஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு விளக்கமளித்து ஓபிஎஸ் பதில் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், இன்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (27/12/22) காலை நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தித் தொடர்பாளர்கள் போன்றோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் உள்ள அதிமுக வழக்கு வரும் ஜனவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் அது குறித்தும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.