போர் வரும்போது நாங்கள் களத்தில் இருப்போம் என நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்து 2017ல் அறிவித்தார். அதன்பின் நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என இரண்டு பெரிய தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் எதிலும் ரஜினியின் மக்கள் மன்றம் கலந்துகொள்ளவில்லை. ரஜினி அறிவிப்புக்குப்பின் கட்சி தொடங்கிய நடிகர் கமல்கூட இரண்டு தேர்தல்களிலும், தனது மக்கள் நீதி மய்யத்தைப் போட்டியிடச் செய்து கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆனால், ரஜினி இன்னமும் அமைதியாகவே உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக ரஜினி, நவம்பரில் கட்சி தொடங்குகிறார், டிசம்பரில் மதுரையில் மாநாடு நடத்துகிறார், களவேலையை தொடங்கச்சொல்லிவிட்டார், விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவுள்ளார் எனப் பரபரப்பு கிளம்பியுள்ளது. இப்படிப்பட்ட பரபரப்புகள், வதந்திகள் கடந்த 25 ஆண்டுகளில் பலமுறை நடந்துள்ளது.
இந்நிலையில் ரஜினியின் மக்கள் மன்றத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். அவர்கள், ரஜினி உடனே அரசியல் கட்சி தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவருகின்றனர். வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி பெயரில் மாவட்டம் முழுவதும் திடீரென சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில், ‘அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், இப்ப இல்லன்னா எப்பவுமே இல்லை’ என்கிற வாசகம் அடங்கியதாக உள்ளது.
ஓராண்டுக்கு முன்பு ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், இப்ப இல்லன்னா எப்பவுமே இல்லை” என்றார். அதே வாசகத்தைக் குறிப்பிட்டு ரஜினி மக்கள் மன்றம் சுவரொட்டி ஒட்டியதைக் காணும்போது, இது மக்களுக்கானதாக தெரியவில்லை, ரஜினிக்குச் சொன்னதுபோல் உள்ளது. அதாவது நீங்க இப்போ அரசியலுக்கு வரலன்னா, அதன்பின் எப்போதும் வரமுடியாது எனச்சொல்வது போல் உள்ளது என்கிறார்கள் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.
இதுபற்றி ரஜினி ரசிகர்களிடம் பேசியபோது, தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ளது. இப்போதுகூட, ‘தலைவர் தனது அரசியல் முடிவைத் தெளிவாக அறிவிக்கமாட்டேன் என்கிறார். அணிகள் ஆரம்பித்து, பூத் கமிட்டி அமைக்கச் சொன்னார் தலைவர், அதனை செய்துகொண்டு இருந்தோம். அந்தப் பணி சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் 40 சதவீதம்கூட பூர்த்தியாகவில்லை. அதன் பின்னால் கரோனா வந்ததால் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. உங்களை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள் என தலைவரிடமிருந்து தகவல் வந்ததே தவிர, அதன்பின் எந்த தகவலும் அவரிடமிருந்து மன்றத்தினருக்கு வரவில்லை.
தற்போது கரோனா களத்திலிருந்து தேர்தல் களத்துக்கு அ.தி.மு.க, தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளும் திரும்பிவிட்டன. கூட்டணி, சீட் பங்கீடு எனக் கட்சிகள் அரசியல் செய்துகொண்டு இருக்கும் நிலையில், தலைவர் கட்சி பற்றியே பேசமாட்டேன் என்கிறார். இதுயெல்லாம் எங்களுக்கு வருத்தமாக உள்ளது. தேர்தலுக்குக் குறுகிய காலமே உள்ளதால் தலைவர் விரைந்து நல்லதாக ஒரு முடிவெடுக்க வேண்டும்’ என்கிறார்கள்.